சீனாவை கண்டு மத்திய அரசு பயப்படுகிறது - அசாதுதீன் ஓவைசி விமர்சனம்
சீனாவை கண்டு மத்திய அரசு பயப்படுகிறது என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அருணாச்சல பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9ம் தேதி சீன ராணுவத்தினர் நுழைய முயன்றனர். அப்போது இந்திய வீரர்கள் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன வீரர்கள் பின்வாங்கி சென்றனர். எல்லையில் சீனர்கள் ஊடுருவல் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா-சீனா மோதல் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில்,
எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார். ஆனால், டெப்சங் மற்றும் டெம்சோக் பகுதியில் சீன வீரர்கள் ஆக்கிரமித்துள்ள செயற்கைகோள் படம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து நமது நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்.
மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். சீனா மீது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அரசியல் தலைமைத்துவத்துடன் செயல்பட்டால் ஒட்டு மொத்த தேசமும் அரசுக்கு ஆதரவாக இருக்கும். நமது ராணுவம் பலமானது தான். ஆனால் அரசு பலவீனமாகவும், சீனாவை பார்த்து பயப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்,