முகல் தோட்டம் பெயர் மாற்றம்; மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு- இ.கம்யூனிஸ்ட் கண்டனம்
ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு "அம்ரித் உத்யன்" என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
'அமிர்த தோட்டம்' டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட தோட்டம் உள்ளது. அழகு நிறைந்த துலிப் மலர்கள் உள்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் இந்த தோட்டம் முகலாய தோட்டம் (முகல் கார்டன்) என அழைக்கப்பட்டு வந்தது. புகழ்பெற்ற இந்த தோட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி 'அமிர்த தோட்டம்' (அம்ரித் உத்யன்) என இந்த தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்து வருகிறது. இதில் முக்கியமாக ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதைக்கு கடமை பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் ஜனாதிபதி மாளிகை தோட்டத்துக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை பா.ஜனதா வரவேற்று உள்ளது. அடிமை மனநிலையில் இருந்து வெளியே வருவதற்காக, மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இது என கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு "அம்ரித் உத்யன்" என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முகலாயார் காலத்தின் நினைவுகளை அழிக்கும் முயற்சிக்கும் இந்த முடிவு தன்னிச்சையான, துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளார்.