கர்நாடக சட்டசபையில் ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
ரூ.14,762 கோடி துணை பட்ஜெட்டுக்கு கர்நாடக சட்டசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பெங்களூரு:
முதல் தவணை
கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரூ.14 ஆயிரத்து 762 கோடிக்கு துணை பட்ஜெட் மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா மீது நேற்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.14 ஆயிரத்து 762 கோடிக்கு துணை பட்ஜெட் மசோதாவை தாக்கல் செய்துள்ளேன். அரசின் செலவுகள் அதிகரித்ததால் முதல் தவணை தொகை அதிகமாக உள்ளது. நடப்பு ஆண்டின் பட்ஜெட் அளவு ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 542 கோடி ஆகும். இதில் முதல் தவணையின் அளவு 5.43 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி சீராகி வருகிறது.
நிவாரண பணிகள்
மாநில அரசின் வரி வருவாயும் எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.14 ஆயிரத்து 100 கோடி வர வேண்டும். அதில் ரூ.8,633 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையையும் கேட்டு பெறுவோம்.
அரசு போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு வருவாயாக ரூ.950 கோடி வழங்க வேண்டும். அந்த தொகையை அரசின் பங்களிப்பு நிதியாக சேர்த்துள்ளோம். கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.392 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா, "மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.14 ஆயிரத்து 100 கோடி வர வேண்டும். மேலும் கல் மற்றும் மணல் குவாரிகளில் இருந்து அரசுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படுத்த சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, "கர்நாடகத்தில் கல் குவாரி தொழிலை முறைப்படுத்த சட்டத்திருத்தம் செய்யப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.