புதிதாக 3,000 நில அளவீட்டாளர்கள் நியமனம்; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல்

கர்நாடகத்தில் புதிதாக 3 ஆயிரம் நில அளவீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக மேல்-சபையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

Update: 2022-09-14 22:57 GMT

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் முனிராஜ்கவுடா கேட்ட கேள்விக்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-

நில அளவீட்டாளர்கள்

கர்நாடகத்தில் கிராமப்புற விவசாயிகளின் நிலங்களுக்கு இன்னும் 'போடி' (நில ஆவணம்) வழங்காததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஒருவருக்கு 200 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் நில ஆவணங்களில் 400 ஏக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் மாநிலத்தில் நிறைய பேருக்கு நில குளறுபடி பிரச்சினை உள்ளது.

நிலங்களை அளவீடு செய்ய புதிதாக 3 ஆயிரம் நில அளவீட்டாளர்கள் (சர்வேயர்கள்) நியமனம் செய்யப்படுகிறார்கள். நில பிரச்சினைகள் குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர்கள், தாசில்தார்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கலெக்டர்கள் வேறு வேலைகளில் தீவிரமாக இருக்க வேண்டி இருப்பதால் இந்த நில பிரச்சினைகள் குறித்த வழக்குகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

உரிய நிவாரணம்

அதனால் இத்தகையவழக்குகளை விசாரிக்க கலெக்டர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கூடுதல் கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம். வாரத்திற்கு 2 முறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். இனி மாவட்ட கூடுதல் கலெக்டர்கள் மாதம் 75 நில வழக்குகளையும், உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார்கள் 100 வழக்குகளையும் விசாரித்து முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்