தந்தையை பற்றி பேசியபோது கண்ணீர் சிந்திய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், இமாசலபிரதேசத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
சிம்லா,
இமாசலபிரதேச முதல்-மந்திரியாக இருமுறை பதவி வகித்த பிரேம்குமார் துமால், மத்திய மந்திரி அனுராக் தாக்கூரின் தந்தை.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுஜான்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதனால் 3-வது முறையாக முதல்-மந்திரியாகும் வாய்ப்பை இழந்தார். தனக்கு எதிராக நடந்த உள்கட்சி சதி குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற துமாலின் கோரிக்கையை கட்சி மேலிடம் ஏற்கவில்லை.
இந்நிலையில், இமாசலபிரதேசத்தில் வருகிற நவம்பர் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் துமாலுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த சூழலில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், சுஜான்பூர் சட்டசபை தொகுதி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தனது தந்தை பிரேம்குமார் துமால், சுஜான்பூர் தொகுதி மக்களின் ஆசியால் இருமுறை முதல்-மந்திரி ஆனார் என்றார்.
அப்போது அவர் கண்கலங்கி சிறிதுநேரம் அமைதியானார். பின்னர் தொடர்ந்து பேசி முடித்தார்.