வழக்கறிஞரை தொடர்ந்து 'டீச்சர்'... நுழைவு வாயில் கதவை திறக்க தாமதம் - காவலாளியை அறைந்த பெண்
நுழைவு வாயில் கதவை திறக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த காரில் வந்த பெண் காவலாளியின் கன்னத்தில் பல முறை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரின் செலியோ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஷூடபா தாஸ் (வயது 40) என்ற பெண் தனது காரில் வந்தார். இவர் தனியார் கல்லூரியில் டீச்சராக பணியாற்றி வருகிறார்.
அப்போது, குடிருப்பு பகுதிக்குள் செல்லும் நுழைவாயிலை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த டீச்சர் தாஸ் காரை குடியிருப்புக்குள் கொண்டு நிறுத்திவிட்டு மீண்டும் நுழைவாயில் அருகே வந்துள்ளார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சச்சின் குமார் என்ற காவலாளியிடம் நுழைவாயில் கதவை திறக்க ஏன் தாமதம்? என கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சச்சின் குமாரை டீச்சர் ஷூடபா தாஸ் கன்னத்தில் பல முறை பளார் பளார் என அறைந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலாளிகள் ஷூடபாவை தடுக்க முயற்சித்தனர். சச்சினை தாக்கிவிட்டு தகாத வார்த்தையில் திட்டிய பின்னர் டீச்சர் அங்கிருந்து சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தன்னை தாக்கிய டீச்சர் ஷூடபா தாஸ் மீது காவலாளி சச்சின் குமார் போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நொய்டாவின் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு கடந்த 21-ம் தேதி மதுபோதையில் காரில் வந்த பாவ்யா ராய் (வயது 32) என்ற பெண் வழக்கறிஞர், நுழைவாயில் கதவை திறக்க தாமதமாக்கிய காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி, காவலாளியை தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க... நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண்