டெல்லியில் மற்றொரு சம்பவம்; உணவு டெலிவரி ஏஜென்ட் கார் மோதி, இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த கொடூரம்

டெல்லியில் புது வருட தின நள்ளிரவில் ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் ஒருவர் கார் மோதி, 1 கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த கொடூரம் நடந்துள்ளது.

Update: 2023-01-05 06:46 GMT



புதுடெல்லி,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. அந்த கார், குறிப்பிட்ட சாலையில் சுற்றி, சுற்றி 4-5 முறை வந்துள்ளது. மொத்தம் 12 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பல்வேறு விடையில்லாத மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

இந்த சூழலில், டெல்லியில் புது வருட தினத்தன்று இதேபோன்று மற்றொரு கொடூர சம்பவம் நடந்து உள்ளது தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் மெயின்புரி நகரை சேர்ந்த கவுசல் யாதவ் என்பவர் டெல்லியில் ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் ஆக உள்ளார்.

இவர் புது வருட தினத்தில் நள்ளிரவில் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் நொய்டா நகரின் செக்டார் 14-ல் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. அதன்பின்னர், அவர் சம்பவ பகுதியில் இருந்து 1 கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு சனி கோவில் அருகே வரை சென்று நின்றுள்ளது.

காரில் வந்த நபர், காரை அந்த இடத்தில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். பலத்த காயமடைந்த அவர் அந்த பகுதியிலேயே உயிரிழந்த கொடூரம் நடந்துள்ளது.

இதுபற்றி அறியாத அவரது குடும்பத்தினர் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், கேப் ஓட்டுனர் ஒருவர் எதிர்தரப்பில் இருந்து பேசியுள்ளார். அதில், கவுசல் விபத்தில் சிக்கி விவரம் அவர்களுக்கு தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசிலும் புகார் அளித்து உள்ளனர்.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்து உள்ளனர். கேப் ஓட்டுனரை பிடித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. டெல்லியில், புது வருட தினத்தில் அஞ்சலி என்ற இளம்பெண் பணி முடிந்து, வீடு திரும்பியபோது இளைஞர்களால் கார் மோதி, இழுத்து செல்லப்பட்டு, சாலையில் 12 கி.மீ. தொலைவுக்கு சுற்றி, சுற்றி வரப்பட்டு உயிரிழந்த கொடூரம் நடந்த சில மணிநேரங்களில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்