முகமது நபிக்கு எதிராக சர்ச்சை கருத்து; பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு
முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பாஜகவின் நுபுர் சர்மா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மும்பை,
முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பாஜகவின் நுபுர் சர்மா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.முன்னதாக, நுபுர் ஷர்மா மீது ஏற்கெனவே இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில், கோந்த்வாவில் வசிக்கும் அப்துல் கபூர் அகமது பதான் (47) என்பவர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், மராட்டிய மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அகமது பதான் தாக்கல் செய்துள்ள புகாரில், "ஷர்மா தெரிவித்த கருத்துக்கள் தனது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அதனால் அவர் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடிவு செய்ததாகவும்" அவர் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி செய்தி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கலந்து கொண்டார். அப்போது அவர், நபிகள் நாயகத்திற்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது.
ஷர்மா "முகமதுநபி மற்றும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக தவறான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவருடைய சர்ச்சை கருத்துகளுக்காக. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அகமது பதான் அளித்த புகாரின் அடிப்படையில், கோந்த்வா காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து நுபுர் ஷர்மா கூறுகையில், "நான் பேசியதை எடிட்டிங் செய்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் போன்றவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அந்த செய்தி நிறுவனமே அதற்கு முழுப்பொறுப்பு" என்றார்.