உத்தரகாண்ட் பாஜக முன்னாள் தலைவரின் மகன் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச்சடங்கில் குவிந்த பொதுமக்கள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

Update: 2022-09-25 15:08 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.

முன்னதாக, கடந்த 18-ம் தேதி முதல், சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இது குறித்து 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண்ணின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், அங்கிதா பண்டாரியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

முன்னதாக, இறுதிப் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று அங்கிதாவின் தந்தையும் சகோதரரும் தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "அங்கிதாவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். விரைவான நீதிக்காக அரசு விரைவு நீதிமன்றத்தை அமைக்கும். இறுதி பிரேதப் பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

அவரது கோரிக்கையை ஏற்று, அங்கிதா பண்டாரியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யா கூறுகையில்,"எனது மகன் சாதாரணமானவன், அவன் வேலையில் மட்டுமே அக்கறை கொண்டவன். என் மகன் புல்கித் மற்றும் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஆகிய இருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அங்கிதா கொலையை கண்டித்து உத்தரகாண்ட் முதல் டெல்லி வரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உத்தரகாண்டில் போராட்டக்காரர்கள் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் சாலை மறியல் நடந்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்