போர் விமானத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆஞ்சநேயர் படம் நீக்கம்
எச்.ஏ.எல். நிறுவனத்தின் போர் விமானத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆஞ்சநேயர் படம் நீக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
ஆஞ்சநேயர் படம்
ராணுவத்துறை சார்பில் 14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தினமும் விமான சாகச நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. எச்.ஏ.எல். நிறுவனம் தனது தயாரிப்பு போர் விமானங்களை அங்கு காட்சிக்கு வைத்துள்ளது. அதில்
இந்துஸ்தான் லீடு பைடர் டிரைனர் (எச்.எல்.எப்.டி.-42) என்ற வகையான போர் பயிற்சி விமான மாதிரியும் இடம் பெற்றுள்ளது.
அந்த விமானத்தின் பக்க வாட்டில் 'புயல் வருகிறது' (ஸ்டோர்ம் ஈஸ் கமிங்) என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன் ஆஞ்சநேயர் படமும் அச்சிடப்பட்டுள்ளது. போர் விமானத்தில் ஆஞ்சநேயர் படம் அச்சிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அந்த விமானத்தில் இருந்து ஆஞ்சநேயர் படத்தை எச்.ஏ.எல். நிறுவனம் நீக்கியுள்ளது.
வேறு நோக்கம் இல்லை
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"எங்களின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் படம் அச்சிடப்பட்டது. இந்த விமானத்தின் பலத்தை வெளிப்படுத்தும் நோக்கதில் தான் அந்த படம் வைக்கப்பட்டது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதை தற்போது நாங்கள் நீக்கியுள்ளோம்".
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வகையான அதிநவீன போர் பயிற்சி விமானத்தில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இது விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.