சரியான நேரத்திற்கு பஸ் வராததால் ஆத்திரம்; அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
கடூர் தாலுகாவில், சரியான நேரத்திற்கு பஸ் வராததால் ஆத்திரம் அடைந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு;
பள்ளி, கல்லூரி மாணவர்கள்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவிற்கு உட்பட்ட பீரூர், தாசரஹள்ளி, எகட்டி, இரேபிதரே உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளனர். அவர்கள் தினமும் அங்கிருந்து தாங்கள் படித்து வரும் கல்வி நிலையங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள்.
அதன்படி நேற்று காலையிலும் அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல புறப்பட்டு தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் கிராமங்களுக்கு பஸ்கள் வரவில்லை.
இதனால் வெகுநேரமாக காத்திருந்து அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அவர்களால் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல முடியாமல் போனது. இதனால் அவர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
பஸ் சிறைபிடிப்பு
பின்னர் காலம் கடந்து வந்த பஸ்சை அவர்கள் சிறைபிடித்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் தங்கள் கிராமங்களுக்கு சரியான நேரத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி அறிந்த அரசு பஸ் பணிமனை மேலாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இனிமேல் சரியான நேரத்திற்கு பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகள் அந்த அரசு பஸ்சை விடுவித்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.