10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 7-வது நாளாக தொடர் போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் சுதந்திர பூங்காவில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-29 18:45 GMT

பெங்களூரு:

7-வது நாளாக...

கர்நாடகத்தில் கடந்த 1975-ம் ஆண்டு அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு, முட்டை போன்றவை அங்கன்வாடிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கிராமபுறங்களில் அங்கன்வாடி மையங்கள் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பதிலாக அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளை கண்காணித்தும், சத்துணவு வழங்கியும் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், முறையான ஓய்வூதிய திட்டம், சம்பளம் என எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அங்கன்வாடிகளில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்களை ஆசிரியர்களாக கருதவேண்டும் எனவும் சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்பட 10 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டம்

இந்த நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கர்நாடக அரசை கண்டித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் கடந்த 23-ந்தேதி முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

7-வது நாளாாக நேற்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. அவர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் கூடாரம் அமைத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு-பகலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டும், படுத்து தூங்கியும் வருகிறார்கள்.

அரசு நடவடிக்கை

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அங்கன்வாடிகளில் உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்குவதும், பாடம் நடத்துவதும் நாங்கள் தான். ஆனால் எங்களுக்கு ஆசிரியர் என்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மேலும், அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த முட்டைகளை எங்கள் கணவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

7-வது நாளாக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு சார்பில் இதுவரை எங்களின் குறைகள் குறித்து கேட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் பல மாவட்டங்களில் இருந்து குடும்பத்தினரை பிரிந்து வந்து இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். அரசு இதற்கு தீர்வு காணவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்