திருட்டு வழக்குகளில் ஆந்திர வாலிபர் சிக்கினார்; ரூ.8 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு
வீடுகளுக்குள் புகுந்து திருடிய வழக்குகளில் ஆந்திர வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.
கோலார் தங்கவயல்;
ரூ.50 ஆயிரம் திருட்டு
சிக்பள்ளாபூர் மாவட்டம் பாகேப்பள்ளி தாலுகா பட்ரபாளையா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 44-ல் உள்ள தேவரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சாந்தம்மா. இவர் சம்பவத்தன்று வெளியே சென்றபோது, அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து சாந்தம்மா, பாகேப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வீடு புகுந்து திருடியதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஆந்திர மாநிலம் பெனுகொண்டா தாலுகா, பத்தேகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த ஷேக் என்பது தெரியவந்தது.
பல்வேறு வழக்குகள்
இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் சாந்தம்மா வீடு உள்பட பல பகுதிகளில் திருட்டி ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர் அதே பகுதியில் உள்ள முகமது கலிமுல்லா என்பவரது வீடு உள்பட பலரின் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடியதை ஒப்பு கொண்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி பொருட்களை மீட்டனர்.பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் மூலம் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த பல்வேறு திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.