சைரஸ் மிஸ்திரி கார் விபத்து எதிரொலி: இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் - ஆனந்த் மகிந்திரா டூவீட்
சைரஸ் மிஸ்ட்ரி உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இனி பின்னிருக்கையில் அமர்ந்தால் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.
மும்பை,
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) ஆவார். இவர் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் சரோடி பகுதியில் உள்ள சூர்யா ஆற்று பாலத்தில் அவரது கார் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த மற்றொருவரும் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த கார் டிரைவர் அனய்தா பந்தோல் உள்பட 2 பேரை போலீசார் மீட்டு குஜராத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சைரஸ் மிஸ்திரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காசாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து பால்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்த போலீசார் பால்கர் பகுதியில் உள்ள சரோட்டி சோதனைச் சாவடியை 2.21 மணிக்கு கார் கடந்துள்ளது. விபத்து நடந்த பகுதி அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. விபத்து நடந்த நேரம் சரியாக 2.30 மணி. செக் போஸ்டில் இருந்து கிளம்பிய கார் 9வது நிமிடத்தில் விபத்து நடந்துள்ளது. 20 கி.மீ தூரத்தை கார் வெறும் 9 நிமிடங்களில் கடந்தது தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது சைரஸ் மிஸ்ட்ரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் ஆனால் சீட் பெல்ட் அணியவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதனை மேற்கோள் காட்டியுள்ள மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, "நான் காரில் பயணிக்கும்போது பின் இருக்கையில் அமர்ந்தாலும் இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். உங்கள் அனைவருக்கும் இதைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் குடும்பத்திற்காக இதைச் செய்வோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.