காட்டு யானையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

மங்களூரு அருகே இளம்பெண் உள்பட 2 பேரை தாக்கி கொன்ற காட்டுயானையை பிடிக்க 5 கும்கியானைகள் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2023-02-21 18:45 GMT

மங்களூரு:-

காட்டுயானை தாக்குதல்

தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா மீனாடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 21). இவர் பேரடுக்கா பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கர்மனே கிராமத்தின் அருகே சென்றபோது, வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை ஒன்று ரஞ்சிதாவை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து காட்டுயானை அவரை காலால் மிதித்து கொன்றது.

இதை பார்த்து அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ராய் என்பவர் ஓடி வந்தார். அவரையும் காட்டுயானை காலால் மிதித்து கொன்றது. இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் 2 பேரின் உடல்களையும் எடுக்கவில்லை. காட்டுயானை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடல்களை எடுக்க விடுவோம் என்றனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானையை பிடிக்க நடவடிக்ைக எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கும்கி வைத்து பிடிக்க முயற்சி

அதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 2 பேரின் உடல்களும் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே 2 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதாது துபாரே மற்றும் மைசூரு யானை முகாமில் இருந்து அபிமன்யூ, பிரசாந்த், ஹர்கர், கஞ்சன், மகேந்திரா ஆகிய 5 கும்கி யானைகளை வரவழைத்தனர். மேலும் சுள்ளியா, சுப்பிரமணியாவில் இருந்து 50-க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் வந்துள்ளனர். இவர்கள் மீனாடி, கர்மனே, குற்றப்பாடி ஆகிய வனப்பகுதியையொட்டி இடங்களில் கும்கிகள் உதவியுடன் அந்த காட்டுயானையை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

விரைவில் பிடித்து விடுவோம்

இது குறித்து வனத்துறை அதிகாரி தினேஷ் கூறியதாவது:-

கர்மனே பகுதியில் இளம்பெண் உள்பட 2 பேரை தாக்கி கொன்ற காட்டுயானையை பிடிக்கும் பணி தொடங்கியது. இதனால் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்கிறோம். தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம். மேலும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்.

இந்த காட்டுயானையை பிடிக்க 5 கும்கி யானைகள் மற்றும் 50 வனத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அந்த காட்டுயானை பிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்