இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
தர்மசாலாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிம்லா,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் சங்க அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதன் 2-ம் நாள் மற்றும் 3-ம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பல்வகை பயிர்களை பயிரிடும் திட்டம் போன்றவற்றை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை பார்த்து கையசைத்து அவர்களது வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.