மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டறிந்த தனியார் நிறுவன ஊழியர்

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். மூலம் மனைவியின் கள்ளத்தொடர்பை தனியார் நிறுவன ஊழியர் கண்டறிந்தார்.

Update: 2023-03-26 18:45 GMT

பெங்களூரு:-

ஜி.பி.எஸ். வசதி

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். அவருக்கும், பெண் ஒருவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. அவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவன ஊழியர் கார் ஒன்றை வாங்கினார். அந்த காரில் ஜி.பி.எஸ். வசதி உண்டு என கூறப்படுகிறது.

இதனால் அவர் இரவு பணிக்கு செல்லும்போது காரின் செயல்பாடுகளை தனது செல்போனில் பார்த்து வந்தார். இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் இரவு பணிக்கு செல்லும் சமயத்தில், கார் தினமும் வெளியே சென்று வந்துள்ளதை ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்தார்.

கள்ளத்தொடர்பை கண்டறிந்தார்

மேலும் கார் விமான நிலைய சாலையில் உள்ள ஓட்டலுக்கு அடிக்கடி சென்று வந்தது அவருக்கு தெரிந்தது. இதையடுத்து அவர் அந்த ஓட்டலுக்கு சென்று விசாரித்தார். அப்போது அவரது மனைவி, வாலிபர் ஒருவருடன் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது. அப்போது தான் அவரது மனைவிக்கும், வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தனியார் நிறுவன ஊழியருக்கு தெரியவந்தது.

காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். மூலம் மனைவியின் கள்ளத்தொடர்பை அவர் கண்டறிந்தார். இதுகுறித்து தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும், கள்ளக்காதலை கைவிடவும் அவர் மறுத்ததாக தெரிகிறது.

மனைவிக்கு நோட்டீஸ்

மேலும், அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனியார் நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர், பெங்களூரு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தனது மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகாலட்சுமிபுரம் போலீசாருக்கு உத்தரவிடுமாறு கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தனியார் நிறுவன ஊழியரின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மகாலட்சுமிபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் மகாலட்சுமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்