நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள்; அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2022-08-31 08:19 GMT



புதுடெல்லி,



இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் வறுமைக்கு ஆளாகும் நாட்டு மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

எனினும், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் குறைவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல், ஆசிட் வீச்சு, கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகுதல் மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பிற குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே காணப்படுகிறது.

இதுபற்றி தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 31,677 ஆகும். இதன்படி, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 19.34% அளவுக்கு அதிகரித்து உள்ளன.

இதன்படி, நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இந்த பட்டியலில், ராஜஸ்தான் (6,337) முதல் இடத்திலும், மத்திய பிரதேசம் (2,947) மற்றும் உத்தர பிரதேசம் (2,845) முறையே 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளன.

2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13.2% அதிகரித்து உள்ளது.

இவற்றில், 96.5% பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பெண்களுக்கு நன்கு தெரிந்தவர்களே குற்றவாளிகளாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. அவர்கள், நண்பர்கள், காதலர்கள், பிரிந்து சென்ற கணவர்கள், பணியிட உரிமையாளர்கள் அல்லது பிற தெரிந்த நபர்களாக உள்ளனர்.

அதிலும், 64% பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்