அம்ரித்பால் சிங் விவகாரம்; கைது செய்த அனைவரையும் விடுவிக்க வேண்டும்: அரசுக்கு சீக்கிய அமைப்பு 24 மணிநேர கெடு

அம்ரித்பால் சிங் விவகாரத்தில் கைது செய்த அனைவரையும் 24 மணிநேரத்தில் விடுவிக்க வேண்டும் என அரசுக்கு சீக்கிய அமைப்பு கெடு விதித்து உள்ளது.

Update: 2023-03-27 16:02 GMT



சண்டிகார்,


பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பை நடத்தி வரும் அம்ரித்பால் சிங் என்பவர், தனது நெருங்கி கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை போலீசாரிடம் இருந்து மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில், அவரது ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்திருந்தனர்.

அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்து உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து போலீசார் சிங்கை தேடி வந்தனர். எனினும், அவர் போலீசில் சிக்கவில்லை.

இதனால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், சீக்கியர்கள் அதிகம் கொண்ட அகால் தக்த் என்ற சீக்கிய அமைப்பு அரசுக்கு 24 மணிநேர கெடு விதித்து உள்ளது. இதன்படி, அம்ரித்பால் சிங் விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் 24 மணிநேரத்தில் அரசு விடுவிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் வளாகத்தில், அகால் தக்த் அமைப்பின் தலைவரான கியானி ஹர்பிரீத் சிங் தலைமையில் பல்வேறு சீக்கிய அமைப்புகள் ஒன்று கூடி 3 மணிநேரம் ஆலோசனை நடத்தின.

இதன்பின்னர், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் ஹர்ஜீந்தர் சிங் தமி இன்று கூறும்போது, இந்த கூட்டத்தில் அம்ரித்பால் விவகாரத்தில் அரசு அதிகப்படியான முறையில் நடந்து கொண்டு உள்ளது என பல்வேறு சீக்கிய அமைப்புகளின் தலைவர்களும் தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து, வீடுகளில் இருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அதனால், கடந்த 18-ந்தேதியில் இருந்து கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரையும் விடுவிக்க வேண்டும் என அரசுக்கு 24 மணிநேர காலக்கெடு வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எங்களது கோரிக்கை, பகவந்த் மான் தலைமையிலான அரசால் ஏற்கப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அகால் தக்த் முடிவு செய்யும் என்று தமி கூறியுள்ளார்.

இதற்கு முன் கியானி சிங் நேற்று பேசும்போது, அம்ரித்பால் போலீசில் சரண் அடைய வேண்டும். அவர் விசாரணையை எதிர்கொண்டு, போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். அம்ரித்பால் விசயத்தில், குறைந்த அளவே பங்கு கொண்டதற்கான சாத்தியமுள்ள அப்பாவி இளைஞர்களை கைது செய்ய, இந்த வாய்ப்பை போலீசார் பயன்படுத்தி உள்ளனர் என அகால் தக்த் தலைவர் கியானி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்