சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற நாட்டு மக்களுக்கு அமித் ஷா அழைப்பு
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீடுகளில் மக்கள் தேசிய கொடி ஏற்ற அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வீடுகளில் மக்கள் தேசிய கொடியை ஏற்ற அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீடுகளில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றி இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம், இளைஞர்களுக்கு மூவர்ணக்கொடி மீதுள்ள மரியாதையையும், பற்றுதலையும் அதிகரிக்கச் செய்வதுடன், சுதந்திரத்திற்காகப் போராடிய துணிச்சலான இதயங்களின் தியாகம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்." என அவர் தெரிவித்தார்.