நாய் கடியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்

கர்நாடகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாய் கடியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

Update: 2023-10-07 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக சுகாதாரத்துறை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தெருநாய்கள், வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ஏ.பி.எல்., வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பி.பி.எல். ரேஷன் கார்டுகள் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

தேசிய ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் ரேபிஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கையை தீவிரமாக எடுக்க வேண்டும். மேலும் நாய்கடி மற்றும் விலங்குகளால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான மருந்து, மாத்திரைகளையும் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். குறிப்பாக ரேபிஸ் நோய் தடுப்பூசி, ரேபிஸ் இம்யூன் குளோபுலின்ஸ் ஆகிய மருந்துகளை கட்டாயம் இருப்பு வைத்துக்கொள்வதை உறுதி செய்ய

வேண்டும் என்று சுகாதாரத்துைற உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை நாய் கடியால் பாதிக்கப்பட்ட 25 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்