'அக்ரம-சக்ரம' திட்டத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் ஓராண்டு நீட்டிப்பு
கர்நாடகத்தில் அரசு நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் நலனுக்காக கிராமப்புறங்களில் ‘அக்ரம-சக்ரம’ திட்டத்தில் விண்ணப்பிக்க ஓராண்டு காலத்தை நீட்டிக்கும் நில சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் அரசு நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் நலனுக்காக கிராமப்புறங்களில் 'அக்ரம-சக்ரம' திட்டத்தில் விண்ணப்பிக்க ஓராண்டு காலத்தை நீட்டிக்கும் நில சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
அக்ரம-சக்ரம திட்டம்
கர்நாடக சட்டசபையில் நேற்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், 'அக்ரம-சக்ரம' திட்டத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்க வழிவகை செய்யும் கர்நாடக நில வருவாய் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் அரசு புறம்போக்கு நிலத்தை விவசாயிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த நிலத்தை அவா்களுக்கே வழங்க 'அக்ரம-சக்ரம' திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டத்தில் பயனாளிகளின் நலன் கருதி, அவற்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு நீட்டிப்பு
கர்நாடகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு அந்த நிலத்தை அவர்களுக்கே வழங்க முடிவு செய்யப்பட்டு்ளளது. விவசாயிகளின் நலனுக்காக புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகள் விண்ணப்பிக்க மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் அரசு நிலத்தில் வீடுகளை கட்டியவர்களும் இதில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த மசோதாவுக்கு இந்த சபை ஒப்புதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.
ஒருமனதாக நிறைவேறியது
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, 'பெங்களூரு உள்பட மாநகராட்சி எல்லையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும், பிற மாநகராட்சிகளில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும், நகரசபைகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும், புரசபை உள்பட இதர நகரங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் அரசு நிலத்தை பயன்படுத்தி வருகிறவர்களுக்கு இந்த 'அக்ரம-சக்ரம' திட்டம் பொருந்தாது என்று அரசு சொல்கிறது. அதனால் அந்த எல்லைக்குள் அரசு நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார்.
அதன் பிறகு சபையில் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.