கோழிக்கோடு விமான விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை கட்ட முடிவு!
மருத்துவத் துறை இதற்கான அனுமதியை அளித்தவுடன் விரைவில் கட்டுமானம் தொடங்கும் என்று கூறினர்.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கரிப்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விமான விபத்தில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியில் ஒரு மருத்துவமனையை கட்ட முடிவு எடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் ரூ.50 லட்சம் நிதி திரட்டி உள்ளனர். இந்த மருத்துவமனை விபத்து நடந்த பகுதியில் கட்டப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். இந்த மருத்துவமனை அரசால் நடத்தப்படும் பொது சுகாதார நிலையமாக கட்டப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கான செயல் வடிவம், மலபார் மேம்பாட்டு கழகம் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, விமான விபத்து நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி மருத்துவமனை கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் மட்டுமன்றி, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரும் இந்த உதவி திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திரட்டப்பட்ட ரூ.50 லட்சம் தொகை மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலபார் மேம்பாட்டு கழக தலைவர் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது.
விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே ஒரு பொது சுகாதார நிலையம் இருந்தது. ஆனால் அதில் போதிய வசதி இல்லாத காரணத்தால், பெரிய மருத்துவமனையை நாடி சென்றோம். இதன் காரணமாகவே இப்போது பெரிய அளவிலான, அனைத்து வசதிகளும் கூடிய பொது சுகாதார நிலையத்தை நிறுவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த போது, முதல் ஆளாக வந்து உதவி புரிந்த அப்பகுதி மக்களுக்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் பயன்பாட்டிற்காக இந்த மருத்துவமனை அமைய உள்ளது என்று கூறினார்.
அந்த கொடூர விபத்தில், விமானி, துணை விமானி உட்பட 18 பேர் பலியாகினர்.மொத்தம் 190 பேருடன் துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு அருகே விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மோசமான வானிலையால், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அந்த விமானம், விமான நிலையத்தை தாண்டி 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.
மருத்துவத் துறை இதற்கான அனுமதியை அளித்தவுடன் விரைவில் கட்டுமானம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கும் உயிரிலிருந்தவர்களுக்கும், சட்ட போராட்டத்திற்கு பின், உரிய இன்சுரன்ஸ் பணம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருடைய காயத்தின் அளவை பொறுத்து, சிலருக்கு ரூ.7 லட்சமும், சிலருக்கு ரூ.1 கோடி, சிலருக்கு ரூ.5 கோடி என மாறுபட்ட அளவில் அவர்கள் தேவைக்கேற்ப இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டது.
அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அதிலிருந்து தங்களால் இயன்ற பங்கினை இந்த மருத்துவமனை கட்ட கொடுத்து உதவியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தோருக்கும், அரசின் சார்பிலும் நிவாரணம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.