ஆமதாபாத்-மும்பை புல்லட் ரெயில் திட்டத்திற்கு முழு அளவில் ஒப்புதல்; தேவேந்திர பட்னாவிஸ்

ஆமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்கு அனைத்து ஒப்புதல்களும் அளிக்கப்பட்டு விட்டன என மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Update: 2022-07-14 09:34 GMT



மும்பை



நாட்டின் முதல் புல்லட் ரெயில் குஜராத்தின் ஆமதாபாத் நகர் மற்றும் மராட்டியத்தின் மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஜப்பான் அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் பயனாக இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்க அந்த நாடு முன்வந்தது. அதன்படி முதற்கட்டமாக குஜராத்தின் ஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது.

ரூ.1.1 லட்சம் கோடி திட்ட மதிப்பீடும் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயிலானது மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். 12 நிலையங்களை இணைக்கும். மொத்தம் 508 கி.மீ. தொலைவை கடக்கும். இதனால், இரு நகர பயண இடைவெளி 6 மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் ஆக குறையும்.

இந்த சூழலில், ஆமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்கு அனைத்து ஒப்புதல்களும் அளிக்கப்பட்டு விட்டன என மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவருடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் உடன் இருந்துள்ளார்.

எனினும், ஆமதாபாத் மற்றும் மும்பை இடையே இப்போது ரெயில்வே இயக்கி வரும் ரெயில்களில் 40 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுவது இல்லை என ஆர்.டி.ஐ. தகவல் ஒன்று அதிர்ச்சி விவரங்களை தெரிவித்து உள்ளது.

மும்பையை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் பெற்றுள்ள ஆர்.டி.ஐ. பதிலில், இந்த ஆமதாபாத் மற்றும் மும்பை இடையேயான வழித்தடத்தில் மாதம் ரூ. 10 கோடி இழப்பை சந்தித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களில் 40 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுவது கிடையாது எனவும் இதனால் மேற்கு ரெயில்வேக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது திருப்திகரமாக இல்லையென கூறி இம்மார்க்கமாக புதிய ரெயில்களை இயக்கும் திட்டம் கிடையாது என இந்தியன் ரெயில்வேயும் கூறிவிட்டது. ஆமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ரெயில்கள் 44 சதவீதம் காலியாகவே செல்கிறது என்றும் மொத்த சீட்களில் 40 சதவீதம் முன்பதிவு செய்யப்படுவது கிடையாது எனவும் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்