அக்னிபத் எதிர்ப்பு போராட்டம்: பீகாரில் ரூ.700 கோடி மதிப்பிலான ரெயில்வே சொத்துக்கள் சேதம் - 718 பேர் கைது

பீகாரில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தால் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2022-06-18 15:48 GMT

image courtesy: PTI

பாட்னா,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களில் பீகாரில் போராட்டக்காரர்கள் 60 ரெயில் பெட்டிகள் மற்றும் 11 என்ஜின்களை எரித்துள்ளனர். இதனால் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ரெயில் நிலையங்களில் உள்ள கடைகளுக்கு தீ வைத்து எரித்தும், ரெயில்வேக்கு சொந்தமான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

ஒரு சாதாரண ரெயில்பெட்டி அமைக்க ரூ.80 லட்சமும், ஸ்லீப்பர் கோச் மற்றும் ஏசி கோச் ஒன்றுக்கு முறையே ரூ.1.25 கோடி மற்றும் ரூ.3.5 கோடி செலவாகும். ஒரு ரெயில் என்ஜினை உருவாக்க, 20 கோடி ரூபாய் செலவாகும். 12 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயிலுக்கு ரூ.40 கோடியும் 24 பெட்டிகள் கொண்ட ரெயிலுக்கு ரூ.70 கோடிக்கும் மேல் செலவாகும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு-மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வீரேந்திர குமார், 5 ரெயில்கள், 60 பெட்டிகள் மற்றும் 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டதாகவும், சொத்து சேதம் குறித்த முழு அறிக்கையை ரெயில்வே தயார் செய்து வருவதாகவும் கூறினார்.

ஏறக்குறைய 60 கோடி பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில்வேக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் பீகாரில் வன்முறை தொடர்பாக 25 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் இதுவரை 138 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்