திருமணம், தேனிலவுக்காக வாலிபரின் பரோல் 60 நாட்களாக நீட்டிப்பு
கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் வாலிபருக்கு திருமணம், தேனிலவுக்காக வழங்கிய பரோலை 60 நாட்களாக உயர்த்தி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
10 ஆண்டு சிறை தண்டனை
கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வின். கொலை வழக்கு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டு இருந்தார். கைதாகும்போது அஸ்வினுக்கு 21 வயது ஆகும். அந்த கொலை வழக்கில் பெங்களூரு செசன்சு கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு அஸ்வினுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, அஸ்வினுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஏற்கனவே 6 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்து விட்டார். இன்னும் 4 ஆண்டுகளே அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி உள்ளது. கொலை வழக்கில் அஸ்வின் கைதாவதற்கு முன்பு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
9 ஆண்டு காதல்
அதாவது அந்த இளம்பெண்ணை அஸ்வின் 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி இளம்பெண், அஸ்வினின் பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் அஸ்வினுக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்தனர். இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்காக பரோல் வழங்கும்படி சிறை அதிகாரிகளிடம் அஸ்வின் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவருக்கு பரோல் வழங்க அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதையடுத்து, திருமணத்திற்காக பரோல் வழங்க கோரி அஸ்வின், இளம்பெண்ணின் தாய் சேர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அஸ்வின் திருமணத்திற்கு செல்வதற்காக ஏப்ரல் 5-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.
60 நாட்களாக நீட்டிப்பு
ஆனால் திருமணம், தேனிலவு மற்றும் திருமணத்திற்கு பிந்தைய சில சம்பிரதாயங்கள் நடைபெற இருப்பதால், கூடுதல் நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என கோரி அஸ்வின் மற்றும் இளம்பெண்ணின் தாய் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டுக்கு, அஸ்வின் திருமணம், தேனிலவு மற்றும் அதன்பிறகு நடக்கும் சம்பிரதாயங்களுக்காக பரோல் நாட்களை 60 ஆக உயர்த்தி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே நேரத்தில் பரோல் நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட வேண்டும் என்றும், இனியும் பரோல் நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறி எந்தவிதமான மனுவும் தாக்கல் செய்ய கூடாது என்வும் ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.