மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2022-06-14 15:31 GMT

சிக்கமகளூரு;


தாவணகெரே டவுன் ஆஜாத்நகர் பகுதியில் மைனர் பெண் ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மைனர் பெண்ணிடம், அதேப்பகுதியை சேர்ந்த சுபாஷ்(வயது 23) என்ற வாலிபர் பழகியுள்ளார்.


இதையடுத்து சுபாஷ், மைனர் பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துகொள்வதாக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி மராட்டியத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதுபற்றி மைனர் பெண்ணின் பாட்டி தாவணகெரே மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து மராட்டியத்தில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று சுபாசை கைது செய்தனர். மேலும் மைனர் பெண்ணை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தாவணகெரே கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கை விசாரணை நடத்தி நீதிபதி ஸ்ரீபாத் தீர்ப்பு கூறினார். அதில் திருமண ஆசைவார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்தி சென்றது நிரூபணமானதால் சுபாசுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்