ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு

ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த எவ்வித தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-06 06:41 GMT

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு மீது விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தொடங்கியது.

உட்கட்சி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது. உட்கட்சி விவகாரங்களில் தலையிட சென்னை ஐகோர்ட்டுக்கு குறைவான அதிகாரமே உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

அதேபோல உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து கடந்த 23ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு காலாவதியாகிவிட்டது என்றும், சென்னை ஐகோர்ட்டு அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் தனி நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

நட்போ, கருத்து வேறுபாடோ நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன்..? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும். பொதுக்குழு சட்டப்படி நடைபெற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்