ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Update: 2023-02-22 15:09 GMT

டெல்லி,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் அதிரடி உத்தரவிட்டது.

பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். வழக்கு விசாரணை பல நாட்கள் நீடித்தது. இரு தரப்பும் எழுத்தப்பூர்வ விளக்கத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

பொதுக்குழு செல்லும் என்று கோர்ட்டு அறிவிக்கும்பட்சத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகும். மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகும். அவ்வாறான தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் செல்வது உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்