இந்த ஆண்டு புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி 8,195 இடங்கள் அதிகரிப்பு

நாட்டில் இந்த ஆண்டு புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை மருத்துவப் படிப்பில் 8,195 இடங்கள் அதிகரித்துள்ளன.

Update: 2023-06-09 00:15 GMT

புதுடெல்லி

நாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 30 அரசு மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள்.

இதனால் இளநிலை மருத்துவப் படிப்பில் 8 ஆயிரத்து 195 இடங்கள் அதிகரித்து, மொத்த இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.

அரசு தகவலின்படி, நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

நாட்டில் டாக்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றின் மூலம் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவீன் பவார் கடந்த பிப்ரவரியில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 654 ஆக உயர்ந்துள்ளது. இது 69 சதவீத அதிகரிப்பு.

அதேபோல இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதமும், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை 107 சதவீதமும் கூடியுள்ளன என பாரதி பிரவீன் பவார் கூறினார்.

அதேவேளையில், கடந்த இரண்டரை மாதங்களில் நாடு முழுவதும் 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நடத்திய ஆய்வுகளில், நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பராமரிக்காததால் அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 24 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தில் முறையிட்டுள்ளன. 6 மருத்துவக் கல்லூரிகள் மத்திய சுகாதார மந்திரியை அணுகியுள்ளன.

இதுதவிர மேலும் 102 மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்