'ஹிஜாப்' வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Update: 2022-09-22 18:45 GMT

பெங்களூரு:

ஹிஜாப் அணிய தடை

கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு அங்கு படித்த முஸ்லிம் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம். நடத்தினர். இதுகுறித்து தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இதில், கர்நாடகத்தில் அரசு பள்ளி-கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட சீருடைகளை தவிர வேறு ஆடைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பதிலுக்கு பிற சமூக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

மத அடையாளங்கள்

இந்த நிலையில் கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரணை நடத்திய நீதிபதிகள், கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கி, பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறினர். மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை பள்ளி மாணவர்கள் அணிய கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிா்த்து முஸ்லிம் மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அங்கு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் அந்த மனு மீது கடந்த 10 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று அங்கு இறுதி விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்