மாநகராட்சி தேர்தலை நடத்த கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
மாநகராட்சி தேர்தலை நடத்த கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கில், மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடக அரசு சார்பில் ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதாவது அந்த மனுவில் டிசம்பர் 31-ந் தேதிக்குள் வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்து பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், தேர்தலை நடத்த 3 மாதம் காலஅவகாசம் கேட்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்தும் விவகாரத்தில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பனீந்திரா, நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடரிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.