தனியார் பள்ளிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கூடுதல் கட்டணம் வசூலித்த புகார் தொடர்பாக தனியார் பள்ளிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்து உள்ளது.
பெங்களூரு-
பெங்களூருவை சேர்ந்தவர் சிஜோ செபாஸ்டின். இவர் பெற்றோர் சங்க இணை செயலாளர் ஆவார். இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இந்த நிலையில் பள்ளி சார்பில் கொரோனா காலத்தில் ஆன்லைனில் பாடம் நடத்துவதற்கு வழக்கத்தைவிட 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு பிறகும் அந்த பள்ளி சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நூலகம், நிர்வாக கட்டணம் ஆகியவற்றையும் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் அவரது மகனை வேறு பள்ளியில் வேண்டுமென்றால் சேர்க்கவும் என கூறி உள்ளது.
இந்த நிலையில் சிஜோ, தனியார் பள்ளி சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 85 சதவீத கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பள்ளி மீது கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை அவர் தொடர்ந்தார். அதில் தனியார் பள்ளி கட்டணம் குறித்து மாநில பள்ளி கல்வித்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.