குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் என்னை கைது செய்தது சட்டவிரோதம் - சமூக செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்

சமூக செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறினார்.

Update: 2022-06-26 12:58 GMT

ஆமதாபாத்,

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறினார்.

முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், சமூகஆர்வலர் டீஸ்டா செடல்வாட், மனுதாரர் ஜாகியா ஜாஃப்ரியின் உணர்ச்சிகளை "மறைமுக நோக்கங்களுக்காக" பயன்படுத்திக் கொண்டார் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதனை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு கோர்ட்டில் அவர் கூறியதாவது:-

பயங்கரவாத தடுப்புப் பிரிவு(ஏடிஎஸ்) அதிகாரிகள் எந்த உத்தரவும் இல்லாமல் என் வீட்டிற்குள் நேற்று நுழைந்தனர். அவர்கள் எனது தொலைபேசியைப் பறித்து, என்னைத் தள்ளிவிட்டு கடுமையாகத் தாக்கினர். அதில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டன.

பிற்பகல் 3 மணி முதல் காலை 10.30 மணி வரை நான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டேன்.என் வழக்கறிஞர் அங்கு வந்த பிறகுதான் அதிகாரிகள் எனக்கு எப்ஐஆர் பத்திரத்தை காட்டினார்கள்.

எஃப்ஐஆர் அடிப்படையில் கைது செய்வது சட்டப்பூர்வமானதா? எனக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை? மும்பையில் இருந்து குஜராத்திற்கு ஏடிஎஸ் ஏன் என்னை காரில் அழைத்துச் சென்றனர்? என்னை மிரட்டுவதற்காகவா?

மனித உரிமை வழக்கறிஞர்களை மிரட்டுவது சரியா? இது அதிகார துஷ்பிரயோகம். என்னை கைது செய்ததும், கைது செய்திருப்பதும் சட்டவிரோதமானது. என் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என நான் பயப்படுகிறேன்.

இதுபோன்ற ஒரு போலி மோசடி வழக்குக்கு ஏன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அனுப்பப்பட வேண்டும்? இது புதிய விதிமுறையா

நான் ஒரு மனித உரிமை ஆர்வலர். இது ஒரு அரசியல் வழக்கு. நான் வழக்கில் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைக்கிறேன் மற்றும் அனைத்து சட்ட விசாரணைகள் மற்றும் கேள்விகளுக்கு ஒத்துழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்