வேலை தேடிச்சென்ற பெண்ணை கற்பழித்த அந்தமான் தலைமைச் செயலாளர் பணியிடை நீக்கம்

வேலை தேடிச்சென்ற பெண்ணை கற்பழித்த புகாரில் அந்தமான் தலைமைச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

Update: 2022-10-17 22:46 GMT

புதுடெல்லி,

அந்தமான் நிகோபாரின் தலைமை செயலாளராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை பதவி வகித்தவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திர நரேன். பின்னர் இவர் டெல்லி நிதிக்கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் தலைமை செயலாளராக இருந்தபோது ஜிதேந்திர நரேன் தன்னை கற்பழித்ததாக அந்தமானை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் அந்தமானின் அபர்டீன் பகுதி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் அந்த பெண் கூறியதாவது:-

2 முறை கற்பழித்தனர்

வேலை தேடிக்கொண்டிருந்த எனக்கு அந்தமான் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆர்.எல். ரிஷியின் அறிமுகம் கிடைத்து. அவர் என்னை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தலைமை செயலாளராக இருந்த ஜிதேந்திர நரேனின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது இருவரும் சேர்ந்து என்னை கற்பழித்தனர். அதன் பின்னர் மே மாதமும் அவர்கள் இருவரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி யாரிடமாவது புகார் அளித்தால் என் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர் என்று அந்த பெண் கூறியிருந்தார்.

பணியிடை நீக்கம்

இந்த புகாரின் பேரில் ஜிதேந்திர நரேன் மற்றும் ஆர்.எல். ரிஷியின் மீது அந்தமான் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு புலானாய்வு குழு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திர நரேன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்