100 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்து காபித்தோட்ட உரிமையாளர் பலி

100 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்து காபித்தோட்ட உரிமையாளர் பலியானார்.

Update: 2022-12-22 18:45 GMT

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டத்தில் சந்திரதிரிகோண மலைப்பகுதியில் உள்ளது பாபாபுடன்கிாி. சுற்றுலா இடங்களில் ஒன்றான இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் சிலர் அதிவேகமாக காரை இயக்கி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் சன்னகோடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகு(வயது 40). காபி தோட்ட உரிமையாளர். இவருக்கு சொந்தமாக மலைப்பகுதி அருகே காபி தோட்டம் உள்ளது. தினமும் அவர் தனது ஜீப்பில் தோட்டத்திற்கு வந்து செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் அவர் தனது ஜீப்பில் ஒசபுரா வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது கட்டுப்பாட்டை ஜீப் இழந்தது. இதையடுத்து சாலையில் தறிகெட்டு ஓடிய ஜீப், சாலையோர தடுப்பை இடித்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் ஜீப் அப்பளம் போல் உடைந்தது. இந்த கோர விபத்தில் காபி தோட்ட உரிமையாளர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக சிக்கமகளூரு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், விபத்தில் சிக்கிய ஜீப்பை அங்கிருந்து அகற்றிவிட்டு, காபி தோட்ட உரிமையாளரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்