சாலை தடுப்பில் கார் மோதி 3 பேர் பலி
சித்ரதுர்கா அரசு விருந்தினர் மாளிகை அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சித்ரதுர்கா:
சித்ரதுர்கா அரசு விருந்தினர் மாளிகை அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
கார் விபத்து
சித்ரதுர்கா மாவட்டம்(தாலுகா) மதேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ்(வயது 25). நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சித்ரதுர்காவில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு காரில் சென்றிருந்தார். கோவில்களையும், சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, இறுதியாக உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
காரை செல்லகெரே தாலுகா காமசமுத்திராவை சேர்ந்த டிரைவர் மது(வயது 21) என்பவர் ஓட்டி வந்தார். சித்ரதுர்கா அரசு விருந்தினர் மாளிகை அருகே காந்தி சர்க்கிள் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம்போன்று நொறுங்கியது.
3 பேர் பலி
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த காமசமுத்திராவை சோந்த டிரைவர் மனு, முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பரான சித்ரதுர்கா தாலுகா மதேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சச்சின்(25) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேர் உயிருக்காக போராடி கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே சித்ரதுர்கா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சை
இதேபோல காயமடைந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சித்ரதுர்கா போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.