குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்ததொழிலாளி 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது

குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-03-03 06:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜிரி ஹளேப்பேட்டையைச் சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டா (வயது41). தொழிலாளியான இவர் கும்ப்ளேவில் உள்ள நீர்ஜால் பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் மணி அந்தப்பகுதியில் நடந்த குற்ற வழக்கில் பண்ட்வால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பின்னர் இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கடந்த 19 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் பண்ட்வால் கோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதி, தலைமறைவாக உள்ள மணியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பண்ட்வால் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பண்ட்வால் போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் மணி நெலியாடி அருகே ஷிபாஜே பகுதியில் பதுங்கி இருப்பதாக பண்ட்வால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மணியை கைது செய்தனர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து வந்த போலீசார் நேற்று முன்தினம் பண்ட்வால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மணியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். குற்ற வழக்கில் தொழிலாளியை 19 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்