டெல்லி அரசு மீது தொடர்ந்து பாயும் ஊழல் வழக்குகள்! எம்.எல்.ஏ அமானதுல்லா கைது - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ அமானதுல்லா கானின் தொழில் பங்குதாரரான ஹமீத் அலி என்பவரை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமானதுல்லா கானின் தொழில் பங்குதாரரான ஹமீத் அலி என்பவரை டெல்லி போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, டெல்லி வக்பு வாரியத்தில் நடந்த ஆட்சேர்ப்பில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை ஊழல் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டெல்லி வக்பு வாரிய தலைவர் அமனத்துல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று டெல்லி அரசாங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி), எம்.எல்.ஏ அமானதுல்லா கான் மற்றும் ஹமீத் அலியின் வளாகத்திலும் சோதனை நடத்தியது. அப்போது ஹமீத் அலியின் வீட்டில் இருந்து சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, சில தோட்டாக்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை அமனத்துல்லா கானிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது பல இடங்களில் ஏசிபி சோதனை நடத்தியது.டெல்லி வக்ப் வாரியத் தலைவரும், ஓக்லாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுமான அமனதுல்லா கானை, விசாரணை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) நேற்று கைது செய்தது.
வெள்ளிக்கிழமை அமனத்துல்லா கானிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது பல இடங்களில் ஏசிபி சோதனை நடத்தியது.
கைது செய்யப்பட்டுள்ள அமனத்துல்லா கான் நிரபராதி என்றும், மத்திய பாஜக அரசின் ஆபரேஷன் தாமரையின் ஒரு பகுதி நடவடிக்கை இது என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீண்டும் கூறியுள்ளனர். துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா இந்த வாதத்தை முன்வைத்துள்ளார்.
மனிஷ் சிசோடியா டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "முதலில் அவர்கள்(பாஜக அரசு) சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர், ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அதன்பின், என் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் கைலாஷ் கெலாட் மீது போலி விசாரணை தொடங்கியது.
இப்போது அமனதுல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு தலைவரையும் உடைக்க ஆபரேஷன் தாமரை நடந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமனதுல்லா கான் ஒரு போலி வழக்கில் சிக்கியுள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் போலியான மற்றும் ஆதாரமற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து எதுவும் மீட்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி வக்பு வாரியத் தலைவர் பதவியில் இருந்து அமானதுல்லா கானை நீக்கக் கோரி டெல்லி துணைநிலை கவர்னர் செயலகத்துக்கு ஊழல் தடுப்புப் பிரிவு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.