வாக்காளர் பட்டியலில் இணைக்க பெறுகிற ஆதார் தரவுகள் பொதுவெளியில் கசிந்தால் கடும் நடவடிக்கை- தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியலில் இணைக்க வாக்காளர்களிடம் இருந்து பெறுகிற ஆதார் தரவுகள், பொதுவெளியில் கசிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-07-05 17:22 GMT

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியலுடன் ஆதார்...

ஒரு வாக்காளர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டிருப்பது தொடர்கிறது. இதைத் தடுப்பதற்காக வாக்காளர் பட்டிலுடன் ஆதாரை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 23, உட்பிரிவு 5 வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிற அனைவரும் தங்கள் ஆதார் எண்கணை தெரிவிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதற்காக 6-பி என்ற படிவம் பயன்படுத்தப்படும்.

வெளியே கசிந்தால்....

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:-

வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தாமாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை பெறுவதின் நோக்கம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் பதிவுகளை அங்கீகரிக்கவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறப்பான தேர்தல் சேவைகளை வழங்குவதற்கும்தான். வாக்காளர்கள் ஆதார் எண் சமர்ப்பிப்பதற்கு தன்னார்வமானது என்பது வலியுறுத்தப்படுகிறது.

பெறப்படுகிற ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள், எந்த சூழ்நிலையிலும் பொதுவெளிக்கு சென்று விடக்கூடாது. வாக்காளர்களின் தகவல் பொதுவெளியில் வைக்கப்படுகிறபோது, ஆதார் பற்றிய தகவல்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது மறைக்கப்பட வேண்டும்.

ஆதார் எண் அடங்கிய படிவம்-6 பியை பாதுகாப்பதைப் பொறுத்தமட்டில், விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

சேகரிக்கப்படுகிற படிவம் 6-பி இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்கிய பிறகு, வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவற்றை இரட்டைப் பூட்டுடன் பாதுகாப்புடன் பத்திரப்படுத்த வேண்டும்.

பொது வெளியில் ஆதார் தரவுகள் கசிந்தால், வாக்காளர் பதிவு அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்