பெண் குரலில் பேசி ஆண்களிடம் பணம் பறித்து வந்த வாலிபர் கைது
தட்சிண கன்னடா அருகே பெண் குரலில் பேசி ஆண்களிடம் பணம் பறித்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:-
பெண் குரலில் பணம் பறிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியை அடுத்த பைக்காம்பாடியை சேர்ந்தவர் நவீன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை நவீன் எடுத்து பேசினார். எதிர் முனையில் உஷா என்ற பெண் பேசுவதாக கூறினார். இதையடுத்து நவீனும் அவரிடம் தொடர்ந்து பேசினார். இதையடுத்து இருவரும் அடிக்கடி பேசி வந்தனர்.
இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண் வீடியோ காலில், நவீனிடம் பேசினார். அப்போது நவீன், சில படங்களை அந்த பெண்ணிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த பெண், நவீனை தொடர்பு கொண்டு ரூ.25 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு நவீன் மறுப்பு தெரிவித்ததும், அந்த பெண் நவீன் பேசிய ஆடியோ மற்றும் அவர் அனுப்பிய புகைப்படங்களை காண்பித்து மிரட்ட தொடங்கினார். இதனால் பயந்து போன நவீன், அந்த பெண் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.2 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து மீண்டும் அந்த பெண் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
வாலிபர் கைது
இதையடுத்து அந்த பெண் மீது சந்தேகம் அடைந்த நவீன், உடனே இது குறித்து சூரத்கல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் எண்ணை வைத்து, விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில் நவீனை தொடர்பு கொண்டு பேசியது பெண் இல்லை. ஆண் என்பது தெரியவந்தது. வாலிபர்களை குறி வைத்து அவர் பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் குறித்த விவரங்களை சேகரித்த போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில் அவர் மூடபித்ரியை அடுத்த பைரவி பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயா என்பது தெரியவந்தது. இவர் உஷா என்ற பெயரில் பல வாலிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.