நடைபயிற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நடைபயிற்சியில் ஈடுபட்ட இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:-
பெங்களூரு வசந்த்நகரில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் மின்னல் வேகத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வயாலிகாவலை சேர்ந்த அய்யப்பா(வயது 27) என்பவரை கைது செய்துள்ளனர். இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். அவர், வயாலிகாவலில் தங்கி இருந்து மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.
இவர், மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிவார். அப்போது தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அய்யப்பா மீது ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.