கணவர் மீதான அதீத காதலை வினோத முறையில் வெளிப்படுத்திய இளம்பெண்
கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்த பெங்களூரு இளம்பெண் கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:-
காதல்
'காதல்' என்ற வார்த்தையை வர்ணிக்க முடியாது என்பார்கள் கவிஞர்கள். அதுபோல் காதலை மையமாக வைத்து வந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவிஞர்கள் பெருமாலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டான காதலை மையப்படுத்தியே கவிதைகள், பாடல்கள் எழுதுவார்கள். அக்காலத்தில் காதல் ஒரு ஊரிலோ அல்லது கிராமத்திலோ தான் இருக்கும்.
ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசி பழகி பின்னர் திருமணம் பந்தத்தில் இணைவார்கள். பல காதல்கள் பெற்றோர் எதிர்ப்பு, சாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்ததும் உண்டு. அது இன்றளவும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது காதல் கடல் கடந்து கணினி, செல்போன் வாயிலாக காற்றில் பறந்து காதலர்களிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது.தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
நெற்றியில் பச்சை...
காதல் என்பது பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், வேலையில்லாதவர்கள் செய்யும் வேலை என்று கூறி பலர் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையும் மீறி காதலர்கள் தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் காதலில் மட்டுமல்லாது பல எதிர்ப்புகளை மீறி திருமணம் புரிந்து வாழ்விலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.
அதாவது அந்த இளம்பெண் தனது கணவரின் பெயரான 'சதீஷ்' என்ற பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் வைரல்
அந்த புகப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சிலர் 'இதுதான் உண்மையான காதல்' என்றும், சிலர் 'இது ஓவர் ஆக்டிங்' என்றும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த கருத்துகளுக்கு இளம்பெண் பதில் ஏதும் கூறவில்லை. தனது கணவர் மீதான அதீத அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவே தான் இதுபோன்று செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.