உருட்டு கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை; 3 பேர் படுகாயம்

பெங்களூருவில் தூங்கி கொண்டிருந்தவர்களை உருட்டு கட்டையால் தாக்கியதில் தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-03-02 18:45 GMT

உப்பார் பேட்டை:-

குப்பைகளை சேகரித்து பிழைப்பு

பெங்களூரு மெஜஸ்டிக் அருகே வசித்து வந்தவர் சந்தீப் (வயது 35). தொழிலாளியான இவர், குப்பைகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலேயே சந்தீப் தினமும் படுத்து தூங்குவது வழக்கம். அவருடன், தாவணகெரேயை சேர்ந்த சங்கர், ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா காவேரி காலனியை சேர்ந்த ரவி மற்றும் கென்ஜா ஆகிய 3 பேரும் படுத்து தூங்குவது வழக்கம்.

இவர்களில் சங்கர் மட்டும் மதுபான விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறார். ரவி மற்றும் கென்ஜா ஆகிய 2 பேரும் சந்தீப்புடன் சேர்ந்து குப்பைகளை சேகரித்து வந்தனர். கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி நள்ளிரவு சந்தீப், ரவி, சங்கர், கென்ஜா ஆகிய 4 பேரும் சாப்பிட்டு விட்டு ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே 4 பேரும் படுத்து தூங்கினார்கள்.

கட்டையால் தாக்கி கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த 4 பேரையும் ஒரு மர்மநபர் உருட்டு கட்டையாலும், கல்லாலும் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், 4 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. அவர்கள் 4 பேரையும் பிரியாணி கடை நடத்தி வரும் முகமது என்பவர் மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தீப் மட்டும் பரிதாபமாக இறந்து விட்டார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உப்பார்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு நடத்தினார்கள். அப்போது கடந்த மாதம் 28-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மெஜஸ்டிக்கில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முகமது தைசின் என்ற வாலிபர் வந்து செல்வதும், பின்னர் அதிகாலை 3 மணியளவில் உருட்டு கட்டையுடன் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

ஒடிசா வாலிபர் கைது

இதையடுத்து, முகமது தைசினை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். அப்போது பிரியாணி கடையில் வேலை செய்யும் முகமது தைசின், நள்ளிரவில் சந்தீப் உள்பட 4 பேரும் படுத்திருந்த இடத்தின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அவருடன், 4 பேரும் தகராறு செய்துள்ளனர். உடனே அங்கிருந்து வந்த முகமது தைசின் கடையில் இருந்து உருட்டு கட்டையை எடுத்து சென்று தூங்கி கொண்டிருந்த 4 பேரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

அங்கு கிடந்த கல்லையும் எடுத்து 4 பேரையும் தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்திருந்த சந்தீப் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியாகி இருந்தார். இதையடுத்து, முகமது தைசின் கைது செய்யப்பட்டார். அவர் மீது உப்பார் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்