தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைபோட்டு தொழிலாளியை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பீனியா:-
பெங்களூரு பீனியா அருகே வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 42). தொழிலாளியான இவர், புரோக்கர் வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுஅருந்திவிட்டு, குடிபோதையில் கொரகுண்டே பாளையா பகுதியில் சிவக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற 2 பேரை சிவக்குமார் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவக்குமாருடன், அவர்கள் 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் சிவக்குமார் 2 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து, சிவக்குமாரை அடித்து உதைத்து தாக்கி கீழே தள்ளினார்கள். பின்னர் சாலையோரம் கிடந்த கல்லை சிவக்குமார் தலையில் போட்டு 2 பேரும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.
நேற்று அதிகாலையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பற்றி தகவல் அறிந்த ஆர்.எம்.சி.யார்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். குடிபோதையில் சிவக்குமார் தகராறு செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவரை கொன்ற 2 பேர் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.