4-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு
விசாரணைக்கு அழைக்க சென்றபோது 4-வது மாடியில் இருந்து நிர்வாணமாக குதித்து வாலிபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
விசாரணைக்கு...
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் பேகூர் சாலையை சேர்ந்தவர் முகமது உசைன் (வயது 31). இவர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 4-வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மீது வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் விசாரணை உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களாக அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து, தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை, கொன்றுவிடுவதாக முகமது உசைன் மிரட்டி உள்ளார். இதுகுறித்து இளம்பெண் தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். உடனே அவர் இதுதொடர்பாக பொம்மனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குதித்து சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது உசைனை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்றார். அப்போது அவருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார், முகமது உசைனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் போலீசார், முகமது உசைனை விசாரணைக்காக பிடித்து இழுத்து சென்றனர்.
அப்போது முகமது உசைன், வீட்டின் 4-வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே குதித்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு குவிந்தனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சி.ஐ.டி. விசாரணை
இதற்கிடையே தனது மகனை கைது செய்வதற்கு வந்த போலீசார், அவரை கடுமையாக தாக்கியதாகவும், விசாரணைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு மகனின் ஆடைகளை கிழித்து எறிந்து முகமது உசைனை 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்றதாகவும் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி. போலீசார்
விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.