திருடன் என நினைத்து வாலிபர் குத்திக் கொலை
பெங்களூருவில் திருடன் என நினைத்து வாலிபரை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:-
வாக்குவாதம்
பெங்களூரு பாபுஜி லே-அவுட்டை சேர்ந்தவர் காதர் அகமது (வயது 28). நேற்று முன்தினம் மாலையில் அவர் தனது நண்பருடன் வெளியே புறப்பட்டு சென்றார். பாபுஜி லே-அவுட் 9-வது கிராஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் முன்பாக காதர் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கட்டிட வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், காதர், அவரது நண்பரை திருடன் என நினைத்தனர். பின்னர் அவர்களை பிடித்து தொழிலாளர்கள் விசாரித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த வீட்டு உரிமையாளரான ராஜேந்திர பிரசாத், கட்டுமான பொருட்களை திருடி செல்ல வந்துள்ளீர்களா? என காதர், அவரது நண்பரிடம் கேட்டுள்ளார். இதனால் காதருக்கும், ராஜேந்திர பிரசாத்திற்கும் வாக்குவாதம் உண்டானது. அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் ராஜேந்திர பிரசாத்தை காதர் குத்த முயன்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் காதரிடம் இருந்து கத்தியை ராஜேந்திர பிரசாத் பறித்து கொண்டார்.
வாலிபர் குத்திக் கொலை
இதனால் அங்கு கிடந்த கட்டைகள் மற்றும் கல்லால் ராஜேந்திர பிரசாத்தை காதரும், அவரது நண்பரும் தாக்கி உள்ளனர். இதையடுத்து, கட்டிட தொழிலாளர்கள் ஓடி வந்துள்ளனர். இந்த நிலையில், காதரிடம் இருந்து பறித்த கத்தியால் அவரை ராஜேந்திர பிரசாத் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், காதர் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த காதர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காதர் இறந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சந்திரா லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். காதரை திருடன் என கூறியதால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் உள்பட 3 பேரை தேடிவருகிறார்கள்.