மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள்; 'புனித்' என பெயர் சூட்டப்பட்டது
மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோளுக்கு ‘புனித்’ என பெயர் சூட்டப்பட்டது.
பெங்களூரு: நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி நாட்டில் பள்ளி மாணவர்களால் 75 செயற்கைகோள்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி பெங்களூரு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் கே.ஜி.எஸ்.-3 சாட் என்ற செயற்கைகோள் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர்.
இதற்காக ரூ.1.9 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஒரு செயற்கை கோளை உருவாக்கி உள்ளனர். அதற்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்டி உள்ளனர். 'புனித்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் அந்த செயற்கைகோள் நவம்பர் மாதம் 15 முதல் டிசம்பர் மாதம் 31-க்குள் விண்ணில் செலுத்தப்படும். இதுமட்டுமின்றி பெங்களூரு மண்டலத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் 1,000 பேர் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதை பார்க்கவும் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்தார்.