ஆபாச படம், பணத்திற்கு அடிமையாகி பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர்
மேற்கு வங்காளத்தில் ஆபாச பட அடிமையான நபரை, பண ஆசை காட்டி உளவு வேலை பார்க்க பாகிஸ்தான் தூண்டிய அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
சிலிகுரி,
பீகாரின் சாம்பரான் பகுதியை சேர்ந்த நபர் குட்டு குமார். இவரது மனைவி சோபா சிங். 2010-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு உளவு வேலை பார்க்கிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ராணுவ உளவு பிரிவு இவரை கடந்த 2 தினங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி மாவட்டத்தில் தேவாஷிஷ் காலனி பகுதியில் வைத்து சிறப்பு அதிரடி படை கைது செய்தது.
ஆனால், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என சோபா சிங் கூறுகிறார். ஆசிரியராக பணியாற்றிய குட்டுவிடம் நடந்த விசாரணையில், அவர் தொடக்கத்தில் இருந்தே ஆபாச பட அடிமையாக இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் அது தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படிப்பட்ட சூழலில் தடை செய்த வலைதளம் ஒன்றிற்குள் அவர் சென்றுள்ளார். அதில், அவரது மொபைல் போன் எண் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து உள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின்போது, அது தடை செய்யப்பட்ட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரது செயல்பாடுகளை உளவு அமைப்பு கண்காணித்து வந்துள்ளது. அவரது பலவீனம் பற்றி தெரிந்து கொண்டு, பண ஆசையும் காட்டியுள்ளது. அதில் குட்டு எளிதில் வீழ்ந்து விட்டார்.
இறுதியில் அவரை ஐ.எஸ்.ஐ. அமைப்பு மிரட்ட தொடங்கியுள்ளது. இதனால், 2 ஆண்டுகளுக்கு முன், இவர்கள் தேச விரோத பணியில் ஈடுபடுபவர்கள் என தெரிந்ததும், அதில் இருந்து விலக அவர் முயற்சித்து உள்ளார்.
ஆனால், அவரின் குடிமகன் அடையாளம், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட ஆவணங்களையும் எடுத்து கொண்டிருந்தது.
இதனால், வேறு வழியின்றி உளவு பணி செய்ய அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதற்காக பீகாரில் வசித்த அவரை உளவு வேலை பார்ப்பதற்காக, மேற்கு வங்காளத்தின் சிலிகுரி மாவட்டத்திற்கு செல்ல அறிவுறுத்தியது.
இதன்படி, ராணுவத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பெறுவதற்காக அவரை அனுப்பியுள்ளது. அவர், சிலிகுரி அருகே உள்ள சுக்னா, பங்துபி, ஷாலுகரா மற்றும் காலிம்போங் உள்ளிட்ட ராணுவ முகாம்களில் உள்ள தகவல்களை அனுப்பும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார்.
இதன்படி உரையாடல்கள், புகைப்படங்கள் அல்லது ராணுவ முகாம்களிள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் வழியே அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர், ஒரு புகைப்படத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் ராணுவ முகாம் அருகே இனிப்பு கடையில் வேலையில் சேரவும் அவர் தயாராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவரிடம், என்னென்ன தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன என்பது பற்றி அறியும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.