8 மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்: சட்டசபையில் புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

குடகு, மண்டியா உள்பட 8 மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான புதிய சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேறியது.

Update: 2022-09-21 21:21 GMT

பெங்களூரு: குடகு, மண்டியா உள்பட 8 மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான புதிய சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேறியது.

உயர்கல்வி படிக்கிறார்கள்

கர்நாடக சட்டசபையில் நேற்று கர்நாடக பல்கலைக்கழக திருத்த மசோதா-2022-வை உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தாக்கல் செய்தார். அதில் பீதர், ஹாவேரி, குடகு, சாம்ராஜ்நகர், ஹாசன், கொப்பல், மண்டியா, பாகல்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் புதிதாக பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இதில் சபாநாயகர் காகேரி பேசுகையில், "கர்நாடகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் போதுமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் அங்கு மாணவர்களுக்கு எப்படி தரமான கல்வி கிடைக்கும். நான் சமீபத்தில் கனடா நாட்டிற்கு சென்று இருந்தேன். நமது கர்நாடகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு உயர்கல்வி படிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. இங்கு நமது பல்கலைக்கழகஙகளில் தரமான கல்வி கிடைத்தால், அவர்கள் எதற்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இதை அரசு மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.

கவுரவ ஆசிரியர்கள்

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, பரமேஸ்வர் நாயக், எம்.பி.பட்டீல், கிருஷ்ண பைரேகவுடா மற்றும் பா.ஜனதா உறுப்பினர் அரவிந்த் பெல்லத் உள்ளிட்ட பலரும் பேசினர். அவர்கள் பேசுகையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தற்போது செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் போதுமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிகுத்தகை அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். ஆசிரியர்களில் கவுரவ ஆசிரியர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. போதிய அளவில் கட்டிடங்கள் இல்லை.

புதிய பல்கலைக்கழகங்கள்

அங்குள்ள துணைவேந்தர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பணம் வாங்கி கொண்டு தகுதி அற்றவர்களை நியமித்து கொள்கிறார்கள். கட்டிடம் கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க வேண்டும். தற்போது இருக்கும் பல்கலைக்கழகங்களின் நிலை இவ்வாறு மோசமான நிலையில் இருக்கும்போது, புதிய பல்கலைக்கழகங்களை தொடங:குவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், "அனைவருக்கும் மிக அருகில் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு முடிவு செய்து, அதனை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு நடைபெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமன பணிகள் முறைப்ப்படுத்தப்படும். அதனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்"என்றார். அதைத்தொடர்ந்து அந்த புதிய சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்